அரசுப் பணியில் உள்ள கணவரின் ஊதியத்தை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி அரசின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் தனது கணவரின் ஊதிய விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஜோதி ஷெராவத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ஊதிய விவரங்களை ஜோதிக்கு அளிக்கக்கூடாது என்று அவரின் கணவர் எழுத்துபூர்வமாக கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஊதிய விவரங்களை அளிக்க டெல்லி உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த அவர், ஜோதி ஷெராவத்தின் கணவரின் ஊதிய விவரங்களை உடனடியாக அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதை செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உள்துறை அமைச்சகத்தை அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்களுக்கும் உரிமை உண்டு
இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: கணவர் அரசு ஊழியராக இருந்தால் அவரின் ஊதிய விவரங்களை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு.
மேலும் மக்களின் வரிப் பணத்தில் இருந்துதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப் படுகிறது. எனவே அரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு. இதுதொடர்பாக அளிக்கப்படும் மனுக்களை அரசுத் துறைகள் நிராகரிக்கக்கூடாது என்று ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment