மதத்தலைவர் ஒருவரின் இறுதிச் சடங்கின் போது 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் திரள்வதும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழப்பதும் அண்மைக்கால இந்தியாவில் நிகழ்ந்திராத விஷயம்.
தாவூதி போரா முஸ்லிம்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். இச் சமூகத்தினரின் உலகத் தலைவர்தான் கடந்த வெள்ளிக் கிழமை மறைந்த சையதினா முகமது புர்ஹானுதீன். போரா சமூகத்தினரின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கம் வகித்தவர் புர்ஹானுதீன். போரா சமூகத்தின் மதத் தலைவர் தாய் (Dai) என அழைக்கப்படுகிறார்.
இச் சமூகத்தின் 52-வது ‘தாய்’(Dai) ஆன சையதினா முகமது புர்ஹானுதீனுக்கு போரா சமூகத்தினர் இடையே உள்ள மதிப்பு மிகவும் அதிகம். போரா சமூகத்தினர் எந்தவொரு முக்கிய நடவடிக்கையையும் ‘தாய்’ அனுமதி இன்றிச் செய்வதில்லை.
தாய் போடும் ஒவ்வொரு உத்தரவும், உலக போரா சமுதாயத்தினரிடையே உடன டியாக செயல்படுத்தப்பட்டு விடும்.
19 வயதில் ‘தாய்’
மார்ச் 6, 1915-ல் குஜராத்தின் சூரத்தில் பிறந்த புர்ஹானுத்தீன், 1931-ல் தன் 19 ஆம் வயதில் தாய் பதவியை ஏற்றார். இவருக்கு முன் தாயாக இருந்த அவரது தந்தை சையதினா தாஹிர் சைபுதீன், அவரை இந்த பதவியில் அமர வைத்தார். போராவின் தாயாக வருபவர்கள் வழக்கமாக ஏமன் அல்லது எகிப்து நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இதில், 24 ஆவது தாயாக வந்த யூசூப் நஜுமுதீன், எகிப்தில் இருந்து இந்தியா வந்து மதப்பணியாற்றி வந்தார். இவருக்கு பின் இந்தியர்களே தாயாக வரத் துவங்கினர். 98 வயதான இவருக்கு இஸ்லாமிய ஆண்டின்படி 102 வயது.
21 இமாம்கள்
போராக்கள் 21 பேரை இமாம்களாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 21-வது இமாமிற்குப் பின் வந்தவர்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருப்பதாகவும், அவர்கள் ஒருநாள் திரும்பி வருவார்கள் எனவும் நம்புகின்றனர்.
போராக்களின் 21-வது இமாம் தனக்கு பின் அவர்களுக்கு வழிகாட்ட அமர்த்தியவர்தான் ‘தாய்’(dai) எனும் மதத்தலைவர். அந்த தாயே, தனக்கு அடுத்தபடியாக வருபவர்களை நிர்ணயிக்கிறார். இந்த பதவிக்காக யாரை தேர்ந்தெடுப்பது என அவருக்கு, மறைந்து இருக்கும் ‘இமாம் தய்யப்பு’கள் ஏதாவது ஒருவகையில் அடையாளம் காண்பிப்பார் என்பது போராக்களின் நம்பிக்கை.
இந்தியாவில் தாவூதி போரா முஸ்லிம்கள் குஜராத், மகாராஷ்ட்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக வசிக்கின்றனர். ஒரே இடத்தில் வசிக்கும் பழக்கம் கொண்ட போரக்களுக்கு இடையே சமூக செயல்பாடுகள் அதிகம்.
ஒரு சங்கத்தை போல அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள தாவூதி போராக்களுக்கு நிர்வாகிகள் உண்டு. இவர்களின் நிர்வாகத்தில் இன்றும் யாரவது ஒரு வசதியான போரா, மற்ற அனைத்து தம் சமுதாயத்தினருக்கும் ஒருவேளை உணவிற்கான செலவை ஏற்றுக்கொள்வார். ஏழைகளாக இருக்கும் போராக்கள், சாப்பிடவும் உணவில்லாமல் இருந்து விடக் கூடாது என்பது அதன் முக்கிய நோக்கம்.
இவர்களுக்கு என தனியாக மசூதிகள் உண்டு. போராவினருக்காக உருது மற்றும் குஜராத்தி கலந்த ஒரு மொழி உண்டு.
போரா மொழி எனப்படும் இதற்கு உருதுவை போல் தனியாக எழுத்து வடிவம் உண்டு. இந்த மொழியை போராவின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களில் இவர்களது பெண்கள் அணியும் பர்தா மற்றும் ஆண்கள் தலைக்கு அணியும் தொப்பிகள் தனியாக அவர்களை போரா சமுதாயத்தினர் என அடையாளம் காண்பித்து விடும். கறுப்புநிற உடைகளை இவர்கள் அணிவதில்லை.
போரா சமூகத்தினர் நாட்டுப் பற்று மிக்கவர்கள். தங்கள் சமூகத்தில் மிக மதிக்கத்தக்க ஒருவர் இறந்து விட்டால் அவர்களுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்வர்.
No comments:
Post a Comment