ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஒன்றல்ல, இரண்டல்ல, 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த தடகள வீராங்கனை தீபிகா.
தொழில்முறை வீராங்கனை யாக உருவெடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே தேசிய அளவிலான போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கிய தீபிகா, இப்போது இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் 100 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வந்த இவர், செயின்ட் ஜோசப் அகாதெமிக்கு வந்தபிறகு பயிற்சியாளர் நாகராஜின் அறிவுரையின்பேரில் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்திலும் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார்.
100 மீ. ஓட்டம், 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 4*100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்று வரும் தீபிகா, சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் ஏ.எல்.முதலியார் தடகளப் போட்டியில் கடந்த 3 ஆண்டுகளில் 4 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளார். இதேபோல் தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகளில் 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றிருக்கும் தீபிகா, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளிலும் கணிசமான பதக்கங்களைக் குவித்திருக்கிறார். 2012-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டம், 4*100 மீ. ஓட்டம் ஆகியவற்றில் முதலிடத்தைப் பிடித்த தீபிகா, 2013-ல் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தங்கம் வென்றிருக்கிறார்.
கடந்த நவம்பரில் ராஞ்சியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ. ஓட்டம், 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 4*100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் தீபிகா, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறார். 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் 14.4 விநாடிகளையும், 100 மீ. ஓட்டத்தில் 11.9 விநாடிகளையும் பெர்சனல் பெஸ்ட்டாக வைத்திருக்கும் தீபிகாவின் அடுத்த இலக்கு சீனியர் பிரிவில் சாதிப்பதுதான்.
இந்த ஆண்டில் சீனியர் பிரிவில் பங்கேற்கவிருக்கும் தீபிகா, முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்காக சென்னை செயின்ட் ஜோசப் அகாதெமியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தடை தாண்டுதல் ஓட்டத்தில் எதிரில் இருந்த தடைகளைத் தாண்டி மின்னல் வேகத்தில் விரைந்து கொண்டிருந்த தீபிகாவிடம் பேசியபோது, “இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்டநாள் கனவு. அதை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறேன். தடை தாண்டுதலில் 14 விநாடிகளிலும், 100 மீ. ஓட்டத்தில் 11.5 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற பதக்கங்கள்தான் எனது முதல் சர்வதேச பதக்கங்கள். அந்த வெற்றி என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. சர்வதேச போட்டியில் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறேன். இந்த ஆண்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க முயற்சித்து வருகிறேன்” என்றார்.
கடந்த ஒலிம்பிக்கில் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவின் சாலி பியர்சன், இந்தியாவின் காயத்ரி, கே.என்.பிரியா ஆகியோர்தான் எனது ரோல் மாடல் என தெரிவித்த தீபிகா, “எனது வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர் நாகராஜும், எனது பெற்றோர்களும் இருக்கிறார்கள். நாகராஜ் இல்லையென்றால் நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. நான் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்றால் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்று நாகராஜ் கூறினார். அவர் கூறியபடியே இன்று எனக்கு பதக்கம் கிடைத்திருக்கிறது” என்றார்.
தீபிகாவின் தடகளப் பயணம் குறித்து பயிற்சியாளர் நாகராஜிடம் கேட்டபோது, “பிளஸ் 2 படிக்கும்போதுதான் தீபிகா எங்கள் அகாதெமிக்கு வந்தார். 3 ஆண்டுகளில் அவரிடம் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இயற்கையாகவே அசாத்திய திறமை வாய்ந்தவர். கடினமான இலக்கையும் துரத்திப் பிடிக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர். அகில இந்திய பல்கலைக்கழக போட்டிகளில் மட்டுமின்றி, தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் பதக்கம் வென்றிருக்கிறார். 100 மீ. ஓட்டம், தடை தாண்டுதல் இரண்டிலும் சர்வதேச அளவில் அவர் சாதிக்க வாய்ப்புள்ளது. தீபிகாவுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது” என்றார்.
No comments:
Post a Comment