கணினிக்கான மௌஸைக் கண்டுபிடித்தவரான
அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் டக்ளஸ் எங்கெல்பார்ட் காலனானார்.
வீடியோ கான்ஃபரன்ஸிங் எனப்படும் காணொளி
தொடர்பாடலையும் கண்டுபிடித்திருந்தவரான டக்ளஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில்
இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88.
மின்னஞ்சல், இணையம் எல்லாம் நடைமுறைக்கு
வருவதற்கு நெடுங்காலம் முன்பாகவே இப்படியான வசதிகள் வரும் என்று கணித்துச்
சொன்னவர் அவர்.
1968ஆம் ஆண்டு கணினி விஞ்ஞானிகள் ஆயிரம்
பேர் முன்னிலையில் உரையாற்றியதில் பிரபலமானவர் டக்ளஸ் எங்கெல்பார்ட் ஆவார்.
அவரது அந்த உரை பெரும் உற்சாகத்தையும்
வரவேற்பையும் பெற்றிருந்தது.
கணினியில் பயன்படுத்தப்படுகின்ற மௌஸ்
எனப்படும் சுட்டுக் கருவியை உலகிற்கு முதன் முதலாக அறிமுகம் செய்ததோடு, ஐம்பது
கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு இடத்துடன் காணொலி இணைப்புடன் கூடிய தொடர்பாடல்
வலயமைப்பையும் அவர் செயல்படுத்திக் காட்டினார்.
தனது இந்தக் கண்டுபிடிப்புகளால் அவர்
செல்வந்தர் ஆகவில்லை.
மௌஸுக்கு இவர் பெற்றிருந்த அறிவுசார்
காப்பீட்டு உரிமையின் காலம் முடிந்த பின்னர்தான், நாம் அன்றாடம் கணினியில்
பயன்படுத்தும் ஒரு கருவியாக அது உருவெடுத்திருந்தது.
No comments:
Post a Comment