பிரிட்டன் பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் கிளார்க் (16), உறையவைக்கும் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிரில் தென் துருவத்தைக் கடந்து சாதனை புரிந்துள்ளார். மிக இளம் வயதில் தென் துருவத்தின் 1,129 கி.மீ. தொலைவை வெறும் 48 நாள்களில் நடந்து கடந்தவர் என்ற சாதனை லூயிஸ் கிளார்க் வசமாகியுள்ளது.
அண்டார்க்டிக் கடற்கரைப் பகுதியில் இருந்து, தென்துருவத் தில் உள்ள அமுன்ட்சென் ஸ்காட் பகுதியை இவர் சென்றடைந்தார் என பிபிசி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
“நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 48 நாள்களில் செய்தது போல், நாளை காலை வழக்கம் போல பனியில் சறுக்கு வண்டியை இழுத்துச் செல்ல மாட்டேன் என நினைக்கிறேன். இலக்கை அடைந்த கடைசி நாள் மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. கால்கள் ஓய்ந்து விட்டன” என லூயிஸ் தெரிவித்துள்ளார்.
ராணி எலிஸபெத் மருத்துவ மனைப்பள்ளியில் கிளார்க் படித்து வருகிறார். முன்னதாக, கனடாவைச் சேர்ந்த சாரா மெக்நாயர் லாண்ட்ரி தன் 18-வது வயதில் 2005 ஆம் ஆண்டு தென் துருவத்தைக் கடந்ததே, மிக இளம் வயதினரால் தென் துருவத்தைக் கடந்த சாதனையாக இருந்தது. லாண்ட்ரி சென்ற அதே பயணப் பாதையைத் தேர்ந்தெடுத்து கிளார்க் கடந்துள்ளார்.
கிளார்க் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி 16-வது பிறந்த நாளைக் கொண்டாடி விட்டு, இரு வாரங்களுக்குப் பிறகு தன் துருவப் பயணத்தை மேற்கொண்டார். இருப்பினும், கிளார்க்கின் சாதனையை கின்னஸ் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
No comments:
Post a Comment